நீதிபதி மைக்கிள் டி குன்ஹாவை விமர்சித்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கு பாஜக மாநில செயலாளர் பதவி!

14
119

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கு மாநில செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறது தமிழக பாரதிய ஜனதா கட்சி.

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநிலத் தலைவர் எல். முருகன் இன்று வெளியிட்டார். திமுகவில் இருந்து கட்சி தாவிய விபி துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலும் ஏற்கனவே யார் என்ன பதவிகளில் இருந்தார்களோ அதே பதவியே திரும்பவும் வழங்கி சர்ச்சைக்கு இடமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக பாஜக தலைமை.

அதேபோல் கட்சி தாவி வந்தவர்களுக்கும் ஒரு பதவியை கொடுத்து தக்க வைத்திருக்கின்றனர்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா

அதிமுக ராஜ்யசபா எம்.பி. யாக இருந்தவர் சசிகலா புஷ்பா. அதிமுகவின் அனைத்து அணிகளுக்கும் சென்றுவிட்டு கடைசியாக பாஜகவில் அடைக்கலமானார். அவருக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் 39 பேரில் ஒருவராக பாஜகவின் தேசிய குழு உறுப்பினராக சசிகலா புஷ்பா இடம்பெற்றுள்ளார்.

மாஜி எம்.எல்.ஏ., எம்.பிக்கள்

இதேபோல் தமாகாவில் இருந்து பாஜகவுக்கு தாவிய மாஜி பழனி தொகுதி எம்.பி. எஸ்.கே. கார்வேந்தனுக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி, மாநில செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ அரக்கோணம் சீனிவாசன், கோவை ராமநாதன், கடலூர் வேதரத்தினம், நெல்லை பொன் விஜயராகவன் மற்றும் மாஜி எம்.பிக்கள் கள்ளக்குறிச்சி செளந்தரம், ஆரணி ராமதாஸ், தருமபுரி நரசிம்மன் ஆகியோரும் பாஜகவின் தேசிய பொதுக் குழு உறுப்பினர்களாக்கப்பட்டிருக்கின்றனர்.

பொன்னாருக்கு தேசிய பொறுப்பு?

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. பாஜகவின் தேசிய பொறுப்பு ஒன்றில் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். அதனால் பொன் ராதாகிருஷ்ணன் பெயர் இதில் இல்லை என்கின்றன தமிழக பாஜக வட்டாரங்கள்.

சர்ச்சைக்குரிய மாஜி மேயர்

வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கு மாநில செயலாலர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். வேலூர் மேயராக இருந்த போது, ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி சர்ச்சையில் சிக்கியவர். இதனால் பெங்களூரு தனி நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அவருக்கும் பாஜக பதவி கொடுத்திருக்கிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here