சென்னையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை! – மருத்துவக் குழு தகவல் !

0
19

சென்னை : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமானதையடுத்து, கடந்த 19ம் தேதியிலிருந்து வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த சூழலில், தமிழகத்தில் மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.

அதைக் கட்டுப்படுத்தும் விதமாக மதுரையில் மற்றும் தேனியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 30ம் தேதி இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைவதால், இன்று மருத்துவ வல்லுநர்கள் குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி 7வது முறையாக ஆலேசானை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ வல்லுநர்கள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது என்றும், நீட்டிப்பதில் எந்த பயனும் இல்லை என்றும், சென்னையில் நோய்பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனையை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு என்பது கோடாரியை எடுத்து கொசுவை கொல்வது போன்றது என்றும், மாற்று வழியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் வல்லுநர்கள் கூறினர்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாகவும், சென்னையை போன்று மதுரை, திருச்சி, வேலூரிலும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில் PCR டெஸ்ட் போதுமானது என்றும், ஆன்டிஜென் சோதனைகள் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர். நோய் அறிகுறி தென்பட்டு, பரிசோதனைக்கு தாமதமானால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும், பாதிப்பு அதிகரிப்பது குறித்துபொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் காய்ச்சல் மையங்களில் தொடக்கத்திலேயே தொற்று கண்டறியப்படுவதாகவும், அதேபோல தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் காய்ச்சல் மையங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here