கொள்ளை இலாபத்துக்கு வாய்ப்பான கொள்ளை நோய்: வேடிக்கை பார்க்கும் அரசு !

9
108

சென்னை : அரசு பெரியண்ணன் மனநிலையில் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டிருத்தல் மிகவும் ஆபத்தான ஒன்று. அதே நேரத்தில், பேராசையின் காரணமாகச் சமூகத்தில் நிகழும் அத்துமீறல்களை மட்டுப்படுத்துவதற்கு நியாயமாக இருக்கும் ஒரு அரசால் மட்டுமே முடியும்.

கரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சில மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை இந்த வகையையே சேரும். அரசு இன்னமும்கூட கூடுதலாகத் தன்னுடைய பிடியை இறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மெலிதான அறிகுறிகள் கொண்டவர்களுக்கு அல்லது அறிகுறிகளே இல்லாத தொற்றாளர்களுக்குக்கூட 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதற்குக் குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் வசூலிக்கப்படுவதாக முறையீடுகள் எழுந்தன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தாக வேண்டும் என்றால், கட்டணம் இன்னும் அதிகம். மஹாராஷ்டிரம்தான் முதலில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து, குஜராத்தும் தமிழ்நாடும் நடவடிக்கை எடுத்தன. இந்த மூன்று மாநிலங்களும் அதிக அளவில் கரோனா தொற்றுக்குள்ளானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் பரிசோதிப்பது, கரோனா தொற்று கொண்ட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பது ஆகிய கடமைகளுக்கு அரசே பொறுப்பேற்றது. எனினும், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகத் தனியாரின் உதவியும் தேவைப்பட்டது. ஒரு இக்கட்டான சூழலிலும்கூட, மனிதாபிமானமற்ற முறையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகளை எப்படிப் பார்ப்பது?

அரசு மிகச் சரியான நேரத்திலேயே தலையிட்டிருக்கிறது. கரோனா பரிசோதனைக்குத் தனியார் ஆய்வகங்கள் ரூ.4,500-க்கு மேல் கட்டணம் விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தமிழ்நாடு அரசு ரூ.3,000-ஆகக் குறைத்துள்ளது. இன்னமும் குறைக்கலாம். தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணமும் குறைத்து நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தி, அதற்கேற்ப ஒவ்வொரு நாளுக்கும் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கலாம். கட்டண விகிதங்களை நிர்ணயிப்பதோடு மட்டும் அல்லாது தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்கள் மீது அரசு கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம். ஏற்கெனவே, கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் மக்களைத் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையால் மேலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அரசின் பொறுப்பு. அப்படி மீறும் மருத்துவமனைகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே சரியான பாடமாக இருக்க முடியும்!

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews