குமரி தொகுதியைக் குறிவைக்கும் காங்கிரஸ் & பாஜக: தனித்து களம் காணும் நாம் தமிழர்

2
125

நாகர்கோவில் : எம்.பி. வசந்தகுமாரின் மறைவால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டியிட, காங்கிரஸ், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போட்டி போட தயாராாகி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் திராவிட கட்சிகளுக்கு பெரும் செல்வாக்கு இல்லை அதேவேளை இந்திய கட்சிகள் செல்வாக்கோடு இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் இங்கு பலத்தோடு உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரும் போட்டியிட்டனர். இதில் வசந்தகுமார் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் எதிர்பாராத விதமாக வசந்தகுமார் மரணம் அடைந்தார்.

தொகுதிக்குள் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதால் இரு தரப்பிலும் சீட்டைப் பெற முக்கியப் பிரமுகர்கள் காய்நகர்த்தி வருகின்றனர். குமரியை பொறுத்த வரை நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகமாக நாதகவில் சேருகிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

1991-ம் ஆண்டில் இருந்து இதுவரை 8 முறை இதே தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், அதில் வெற்றி பெற்ற இரு முறையும் மத்திய இணை அமைச்சராக இருந்தார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இப்போது 68 வயது ஆகிறது. பாஜகவைப் பொறுத்தவரை 70 வயதைக் கடந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்படுவதில்லை.  இந்நிலையில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் 70 வயதைக் கடக்கும் முன்பே இடைத்தேர்தலைச் சந்திக்கிறது கன்னியாகுமரி தொகுதி.

எனவே தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்புகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அதேநேரம் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் ‘கட்சி விருப்பப்பட்டால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன்’ எனப் பேசியிருந்தார். நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் இருந்தாலும் அவரது பூர்வீகம் நாகர்கோவில், வடிவீஸ்வரம் பகுதிதான்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மிசோரம் கவர்னராக இருந்த கும்மனம் ராஜசேகரன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருவனந்தபுரம் தொகுதியில் தேர்தலைச் சந்தித்ததுபோல் தமிழிசை சவுந்தரராஜனும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் பாஜகவினரும் இருக்கிறார்கள். தேசிய மகளிரணிப் பொதுச்செயலாளர் விக்டோரியா கெளரி உள்பட பலரும் சீட் கேட்டாலும் இப்போதைய சூழலில் பொன்னாரின் ரூட் க்ளியராக இருப்பதாகத்தான் தெரிகிறது.

விஜயதாரணியின் காய்நகர்த்தல்

காங்கிரஸ் கட்சியிலும் சீட் பெறப் பெரும் படையே முயற்சித்துக் கொண்டிருக்கிறது. விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் சார்பில் தொகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் நாடாளுமன்றம் நோக்கி நகர்வதைத் தன் கனவாக வைத்திருக்கிறார் விஜயதரணி. வசந்தகுமார் மறைவுக்குக் கூட அவர் வரவில்லை.

இதேபோல் நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ரூபிமனோகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ், கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் எனப் பலரும் இந்த ரேஸில் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு சீட் கிடைக்கும்? என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்.

தனித்து களம் காணும் நாம் தமிழர் 

மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி கணக்குகளை பார்த்து போட்டியிட தயாராகி வரும்போது நாம் தமிழர் கட்சி மட்டும் தில்லாக தனித்து களம் காண்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வா. ஜெயன்றீன் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் குமரியில் தான் நாம் தமிழர் கட்சியி தனது விவசாயி சின்னத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு வருகிறார். இடைத்தேர்தல்களில் மாநிலம் முழுவதிலும் இருந்து தம்பிமார்கள் தேர்தல் களப்பணி செய்ய வருவார்கள் என்பதினாலும் பன்மடங்கு உற்சாகத்தில் உள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here