கட்டபொம்மன்’ நடிகர்கள்ல மிச்சமிருக்கும் ஒரே நடிகர் ‘ஜாக்சன் துரை’ பார்த்திபன்

0
47

”கிஸ்தி, திரை, வரி, வட்டி.. வேடிக்கை! வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா, ஏற்றமிறைத்தாயா… நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா… நாற்று நட்டாயா, களை பறித்தாயா அல்லது கழனி வாழ் உழவருக்கு கஞ்சிக் களையம் சுமந்தாயா… மானங்கெட்டவனே.”

தென்தமிழகத்தை ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருடன் இப்படி அழகு தமிழில் வாதிட்டிருப்பாரா எனத் தெரியாது. ஆனால் ‘கட்டபொம்மன்’ என்றால் தமிழகம் இந்த வசனத்தை என்றும் மறக்காது.

சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் ரிலீஸான நாள், மே 16. சரியாக 61 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

படத்தில் சிவாஜிக்கு வில்லனாக ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர், சி.ஆர். பார்த்திபன். சென்னை மடிப்பாக்கத்தில் வசித்துவருபவரிடம் பேசினோம்.

”ஒரு வருஷத்துக்கும் மேல ஓடின காவியம்யா அது. நம்மள்ல யாருக்கு கட்டபொம்மனைத் தெரியும்? இப்ப படிக்கிற பசங்களுக்கெல்லாம் சிவாஜிதான கட்டபொம்மன். ஆனா சும்மா சொல்லக்கூடாது, சிவாஜிக்கு கட்டபொம்மன் மேல அவ்வளவு மரியாதை. எனக்கும் அந்தப் படத்தாலதான் பேரு. கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். சிவாஜிகூட மட்டுமில்ல, எம்.ஜி.ஆர். ரஜினி, பிரபுன்னு எல்லார்கூடயும் நடிச்சிட்டேன். ‘ஏன் ‘விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ படத்துல கூட சுரேஷ் அப்பாவா நடிச்சிருந்தேன். ஆனா, இதெல்லாம் மக்களுக்கு நினைவுல இல்லை.

‘ஜாக்சன் துரையா நடிச்சீங்களே’னு அந்த கேரக்டரைத்தான் அடையாளம் சொல்றாங்க. சிவாஜியுடனும் 15 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். ஆனா, அவங்க குடும்பத்துலயும் எல்லோருக்குமே ஜாக்சன் துரை கேரக்டர் மேல ஒரு தனி பிரியம். சிவாஜிக்குப் பிறகு பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு வரை அந்தக் குடும்பத்துடன் இந்த கேரக்டராலேயே ஒட்டியிருக்கேன்னா பார்த்துக்கோங்க.

இதோ, 61 வருஷம் கடந்தும் எல்லாரும் நினைக்கிறாங்களே” என்றவர், சில நிமிட மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார். ”படத்துல நடிச்சதுல நான் ஒருத்தன்தான் இன்னும் மிச்சமிருக்கேன் தம்பி. ஷூட்டிங்ல சிவாஜி…” எதையோ சொல்ல வந்தவருக்கு அது நினைவுக்கு வர மறுக்க, ”90 தாண்டிடுச்சுல்ல, அதான் நினைவுல வரமாட்டேங்குது…” என்றவர், ”ஆனா அந்த வசனம் எனக்கும் மறக்கலைய்யா… ‘என்ன மீசையை முறுக்குகிறாயா… அது ஆபத்துக்கு அறிகுறி…’ ” எனத் தான் பேசிய வசனத்தைச் சொல்லி சிரிக்கிறார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here