உணவு கொடுக்காமல் நடு ரோட்டில் இறக்கி விடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்… முதல்வர் கடும் எச்சரிக்கை

11
233

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 18,000 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் 24-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் இந்த வைரஸ் இன்னும் பரவக்கூடும் என்ற அச்சத்தில் சுற்றுலாத்துறையானது பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே கேரளாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

கொரோனா வைரஸ் மீதான அச்சம் மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இந்த அச்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் வெளிநாட்டவர்களை இறக்கி விடுவது போன்ற செயல்களை செய்ய வைத்துள்ளது. இந்தச் செய்திகளை அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதிரியான நிலையை நாம் அளிப்பது நமது மாநிலத்தின் மீதான நல்ல எண்ணத்தைக் குறைக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் யாரும் சட்டத்தை தங்களது கைகளில் எடுக்கக் கூடாது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. உணவு கிடைக்காமல் இரண்டு நாள்கள் அலைந்துள்ளனர். குழந்தையுடன் இருந்த ரஷ்ய குடும்பம் ஒன்றுக்கு தங்குமிடம் மறுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வெட்கத்திற்கு உரிய செயல்கள்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தச் சூழல் எல்லாவற்றுக்கும் முடிவு அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நோய் பரவுதல் அடங்கியவுடன் சிறந்த சூழலை உருவாக்க முயற்சி செய்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனித நேயத்துக்கு எதிரான செயல்களில் நாம் ஈடுபடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

வயநாட்டிலுள்ள மானந்தவாடியில் இருந்து கண்ணூருக்குச் சென்ற பேருந்தில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த தம்பதி கடந்த திங்கள் கிழமை பயணித்துள்ளனர். இந்தத் தம்பதியைப் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கோபத்துடன் எதிர் கொண்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணிகள் இருப்பதாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவலும் கொடுத்துள்ளனர்.

பின்னர், பேருந்து கண்ணூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரெஞ்சு தம்பதியை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் சான்றிதழ் அளித்த பின்னரே அவர்கள் தங்கும் இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கண்ணூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி பிஜூ ராகவன் பேசும்போது, “ஏழு சுற்றுலாப் பயணிகள் வெவ்வேறு ரிசார்ட்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரிசார்ட்களில் தங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஏதேனும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடமின்றி சிக்கித் தவித்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ரிசார்ட்டுகளில் 20 அறைகளைத் தயார் செய்து வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதேபோல, கோட்டயம் பகுதியில் இரண்டு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் திங்களன்று கொச்சிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பிப்ரவரி 17-ம் தேதி இருவரும் கேரளா வந்து தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் காட்டவில்லை. எனினும், பாலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இடுக்கிப் பகுதியில் இருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் கடந்த மார்ச் 15-ம் தேதி வைரஸ் தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதிக்கு உள்ளூர் மக்களால் தங்குமிடம் மற்றும் உணவு மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அறிந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கேரளாவில் இவர்கள் இருந்து வந்துள்ளனர்.

காவல்துறையினர்தான் அவர்களுக்கு உணவுகளை அளித்துள்ளனர். பின்னர், அவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் கொச்சியிலிருந்து இங்கிலாந்து திரும்பிச் சென்றுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் கேரளாவில் தொடர்ந்து அதிகரிப்பது சுற்றுலாத்துறையைப் பின்னாள்களில் பாதிக்கும் என்று முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here